இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 டிசம்பர், 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்
இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.
''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.
''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.
''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்'' என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.
சத்துமாவு பாசிப்பருப்பு அடை
--------------------------------------------
தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.
கம்பு தயிர் சாதம்
-------------------------
தேவையானவை: கம்பு - ஒரு கப், தண்ணீர் - 5 கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, 'விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
----------------------------------------------------------------
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4, மாங்காய் இஞ்சி - 50 கிராம், கொத்துமல்லித் தழை - கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, புளி - சிறு அளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்’ தயார்.
கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்
--------------------------------------------
தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை - சிறிதளவு, தக்காளி - 1, ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.
முளைகட்டிய பாசிப்பயறு சூப்
--------------------------------------------
தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.
செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்
--------------------------------------------------------------
தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.
குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

வியாழன், 18 டிசம்பர், 2014

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்


நன்றி: http://suganesh80.blogspot.in/

நான் மேற்சொன்ன வலைத்தளத்தில் படித்தது. தேவை உள்ளவர்கள் முயற்சித்து பார்க்கவும். 
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

புரதங்கள் (ப்ரோடீன்):

புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்:

நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம்:

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி:

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஞ்சள்:

மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.

காய்கறிகள்:

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

Source :http://healervinodh.blogspot.com/2014/05/blog-post_3793.html

இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...

http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீரிழிவு உள்ளவர்களுக்கு மூலிகை மருந்து


இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்திய மக்கள் தொகையில் தற்பொழுது 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உண்ணும் உணவு முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற் பயிற்சியின்மையினாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் மூலிகைகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள்
கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சளானது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.
நாவல்
நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.
பாகற்காய்
பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
வெந்தயம்
வெந்தையத்தில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.
ஆவாரை
ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.
சிறுகுறிஞ்சான்
"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குகிறது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.
கடலழிஞ்சில்
பொன் குறண்டி" எனப்படும் இம் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக "கடலழிஞ்சில்" நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீந்தில்
நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான "இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, சீந்தில் அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இது சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.
வில்வம்
வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரைக் கொல்லி மூலிகைகள்
மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரைநோயை வெல்ல நிச்சயம் முடியும்

நாடி வகைகள், பார்க்கும் விதம் நோய் கணிப்பு முறைகள்

நாடி வகைகள், பார்க்கும் விதம்
நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.
எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.
பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.
நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.
நாடிகளின் தன்மை:
வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.
மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
மொத்தம் 72000
நாடி துடிப்பது நலம் நாடி..... நாடி... அதை நாடு... இல்லா விட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? 
தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையனவாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,
”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல, 
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல, 
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம்நாடி 
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்றநாடிய துயராய்ந்து பார்த்தாரானால் 
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே” 
என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும் போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச் சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.
துவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.
நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி, புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின் அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?
”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்கஅத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும்மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும்வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரேதானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும்வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்கதேனென மூன்று நாடி தெளியவே காணும்”
இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.
இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.
இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

வெள்ளி, 4 ஜூலை, 2014

’சிக்கன் -65’ – கண்டுபிடித்தது யார்?

சென்னையில் 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில் தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது. தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம்.புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990-ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர். நாளிதழ்களில் விளம்பரம் அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி. இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.
images
சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.
தமிழ் தெரியாததால் அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன் 65 பெயரைச் சொல்லத் தெரியாமல், நம்பர் 65 என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று


ஜூலை 4: சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று..
விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'

முடி வளர்ச்சித் தைலம்


வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?
1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்
(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.
இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை...

திங்கள், 16 ஜூன், 2014

நோய்களைத் துரத்தும் துத்தி!

நோய்களைத் துரத்தும் துத்தி!

Abutilon indicum 
இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.
வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.
ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don; 
மருத்துவக் குணங்கள்
ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.
துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)
துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.
துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.
துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.
துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.
துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.
துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.
துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.
துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.
துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.
துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.

வெள்ளி, 30 மே, 2014

பற்பாடகம்

உடல் குளிர்ந்து சமநிலை பெற பற்பாடகம்


மருத்துவக் குணங்கள்
பற்பாடகம் என்பதும் மூலிகையே. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நன்றாக சுத்தி செய்து அல்லது தண்ணீரில் நன்கு கழுகி கிராம் அளவு எடுத்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி  இருவேளையும் கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சீதபேதிமற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும். இதை பெரியவர்களும் சாப்பிட நோய்கள் குணமாகும்.

பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம்சூடு தணியும்.

இனம்தெரியாத எவ்வகைக் காய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்துதேக்கரண்டியளவு மிளகுசுக்குஅதிமதுரம்வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலைமாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.

தேவையான அளவு பற்பாடகத்துடன் சிறிது பச்சைப் பயிறும் சேர்த்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்துவர உடல் குளிர்ந்து சமநிலைக்கு வரும்.

கடுக்காய்

 இளைத்தஉடல் தேற, நரம்புகள் முறுக்கேற கடுக்காய்-Chebulic myrobalan

பொதுவான குணம்   

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமதுஉடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளிஅவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்லதிருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும்முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். 


ஒருவனுடைய உடல்மனம்ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மைசெய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். 


கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக்கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருதுஎன்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர்  Terminalia Chebula - Common Name: Chebulic myrobalan

மருத்துவக் குணங்கள்
 
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

திரிபலா என்பது கடுக்காய்நெல்லிக்காய்தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள் இம்மருந்தினை காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

நூறு கிராம் கடுக்காய் சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலைஇரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். நரம்புகள் முறுக்கேறும்.

கடுக்காய்கொட்டைப்பாக்குபடிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல் புண் ஆகியன ஆறும்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள்.